யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நிறைவடைந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது சென் ஜோன்ஸ் அணி.
இந்த வெற்றியுடன் 118 வடக்கின் சமர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.
இதற்கு அமைய வடக்கின் சமரில் 118 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40 — 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் வடக்கின் சமரில் கடந்த 5 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக முடிவு கிட்டியுள்ளதுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
சென் ஜோன்ஸ் அணியின் வெற்றியில் அணித் தலைவர் ஜெயச்சந்திரன் அஷ்நாத்தின் சகலதுறை ஆட்டம், ரேமன் அனுஷாந்த் பெற்ற அரைச் சதம் என்பன பிரதான பங்காற்றின.
இந்த வருடப் போட்டியில் 93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

